மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி
செவல்பட்டி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
விருதுநகர் அக் 06
.மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பில், தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களை தேடி, ஆளுமை மிக்க தலைவர்கள், பேச்சாளர்கள், படைப்பாளர்கள், சிந்தனையாளர்கள்; நேரடியாக சென்று, தமிழர்களின் வரலாறு, பண்பாடு குறித்து, இன்றைய தலைமுறையினர்களிடம் தங்களின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சியை முன்னெடுத்து நடத்தி வருகிறது.அதன்படி, கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு 24.04.2023 வரை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. உயர்கல்வித்துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.
அதன்படி, முதல் நிகழ்ச்சி 28.07.2023 அன்று விருதுநகரிலும், இரண்டாம் நிகழ்ச்சி 11.09.2023 அன்று சாத்தூரிலும்; நடைபெற்றது. மூன்றாம் நிகழ்ச்சி இன்று செவல்பட்டியில் நடைபெறுகிறது.மாணவர்கள் எதை வேண்டுமானாலும் வாழ்வில் அடைய கனவுகளாக நினையுங்கள். அது எப்படி பட்ட கனவுகளாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த உலகில், சமூகத்தில் உங்களைப் போன்று உங்களுக்கு என்ன அறிவு இருக்கின்றதோ, என்ன சமூக பொருளாதார பின்புலம் இருக்கின்றதோ, அதைவிட எல்லாவற்றிற்கும் பின்தங்கியவர்கள் உங்களைவிட உயர்ந்த சாதனைகளை இந்த உலகில் அடைந்திருக்கிறார்கள்.
நீங்கள் எந்த கனவுகளாக இருந்தாலும், அதை அடைவதற்காக படிப்படியாக முயற்சி செய்வதன் மூலம் நிச்சயமாக எந்த உயரத்தையும் அடைய முடியும். இதை 2000 ஆண்களுக்கு முன்பாக வள்ளுவர் உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் என்ற குறள் மூலம் யார் தன் நோக்கத்தோடு செயல்படாமல் ஒரு செயலை ஆரம்பித்துவிட்டு, பாதியில் விட்டு தோல்வியடைந்தவர்கள் பல பேர் என குறிப்பிடுகிறார். திறமை என்று தனியாக எந்த ஒரு உணர்வுகளும் இல்லை. ஒரு செயலை தொடர்ச்சியாக செய்து, அதன் மூலமாக வெற்றியடைவதே திறமை.
இந்த நவீன உலகில் பல்வேறு துறைகள் வளர்ந்து வருகின்றன. அந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் இருக்கின்றன. இந்த வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே இந்த கிடைத்திருக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி, தமிழ் சமுதாயத்தின் கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரு சில நபர்களால் இந்த சமுதாயம் பெருமைப்பட்டிருக்கிறது. அந்த ஆற்றல் மிகுந்தவர்களாக நீங்கள் உங்கள் வாழ்விலும், சமூக வாழ்விலும் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.
மேனாள் தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர், தமிழ்நாடு காவல்துறை முனைவர் செ.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்கள் ‘வரலாறு படைப்போம்” என்ற தலைப்பில் பேசும் போது தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும், அவர்களுக்கு அரசாங்கம் தனியார் துறையில், சுய தொழில்களில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றது இதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடைய மாபெரும் தமிழ்க் கனவு என்ற திட்டமாகும். உங்களுக்கு நிறைய கனவுகள் இருக்கும் அந்த கனவுகள் எல்லாம் நனவாக வேண்டுமென்றால் நீங்கள் செயல் சிங்கங்களாக உருவாக வேண்டும்.
உலகத்தில் இந்த வாழ்க்கை என்பது மிக எளிதாக இருக்காது. கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கல்வி என்பது வாழ்க்கை என்ற போர்க்களத்தில் போர் புரியும் வாள்.
ஒவ்வொரு போட்டித்தேர்வுக்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. அதை தெரிந்து கொண்டு தங்களை தயார் படுத்திக் கொண்டு முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
உலகத்திலேயே வேகமாக ஓடக்கூடிய உசேன் போல்ட் அவர்கள் 100 மீட்டர் தூரத்தை 9 நொடிகள் கடந்ததற்கு அவர் எடுத்துக்கொண்ட பயிற்சி 9 ஆண்டுகள். அவரிடம் ஒலிம்பிக்கில் மூன்று பதக்கங்கள் வென்று அதன் பின் எங்கு ஓய்வெடுக்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு மறுநாள் காலை 4 மணிக்கு பயிற்சிக்காக பயிற்சியாளர் அழைத்திருக்கிறார் என பதிலளிக்கிறார். உலகத்தில் எதையும் தொடர் முயற்சி மூலம் சாதிக்க முடியும்.
உலகின் மிகச்சிறந்த ஓவியரான பிகாசோ வரைந்த ஒரு நடிகையின் ஓவியத்திற்கு அவர் வைத்த விலை சுமார் ரூ.8 கோடி. 15 நிமிடம் வரைந்ததற்காக அவர் எடுத்துக் கொண்ட பயிற்சி 25 வருடங்கள். மாணவர்கள் தங்களது திறமைகளை தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் செயல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல, கல்வியிலும், ஒவ்வொருநாளும் தொடர்ச்சியான பயிற்சிகள் மூலமே வெற்றிபெற முடியும்.
படிப்புடன் செயல்முறையை பயன்படுத்தி அறிந்திட வேண்டும். கற்பனை திறன்மூலம் புதியவற்றை உருவாக்க வேண்டும். துறைச்சார்ந்த அறிவையும், தனித்துவமான திறமையையும், வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்கான நோக்கம் சிந்திக்க வேண்டும். சிந்திக்காத மனிதர்கள் ஏமாந்து விடுகிறார்கள். புதிதாக சிந்திக்கக்கூடிய படைப்புத்திறனை வளர்க்க நிறைய நூல்களை கற்க வேண்டும். உலகத்தில் சிறப்பாக பேசப்பட்ட நூல்கள், உலக மக்கள் விரும்பி பாராட்டிய நூல்கள் படிக்க வேண்டும். படிப்பதன் மூலம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். வெற்றிக்கு இன்னொரு முக்கியமான காரணி நேரம். உங்களுக்கு இருக்க கூடிய நேரத்தை சிறப்பாக நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. அதை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்வில் சாதிக்க வேண்டும்.
ஒரு மாணவருக்கு தமிழ், ஆங்கிலம், கணினி மொழி, உடல் மொழி என நான்கு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். தொடர்புத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் பிறந்த 10 குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு போலியோ நோயால்; பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் ஜோனாஸ் சால்க் என்பவர். அவரிடம் இந்த தடுப்பு மருந்தை விற்றால் உலகத்தில் உள்ள பெரும் பணக்காரராக ஆகலாம் என்ற கேள்விக்கு, இதை வர்த்தகமாக்கினால் ஏழை நாட்டு மக்கள் இதனை வாங்க முடியாது. எனவே இந்த மருந்தை உலகத்திற்கு இலவசமாக தருகிறேன் என்றால் அந்த மனிதனுடைய நோக்கம் உலகத்திலுள்ள மக்கள் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக செய்தார்.
வர்த்தகத்திற்காகவும், நோபல் பரிசுக்காகவும் விமானம் கண்டுபிடிக்க முயற்சித்தவர்கள் மத்தியில், பெரிய நிறுவனங்களால் கூட பறக்க வைக்க முடியாத இயந்திரத்தை, மிதிவண்டி பழுதுபார்க்கும் ரைட் சகோதரர்களால் முடிந்தது. அவர்கள் விமானத்தை கண்டுபிடித்ததற்கான நோக்கம் உலகத்தில் உள்ள 400 கோடி மக்கள் பறக்கலாம் என்றனர்.எதற்கு, எப்படி என்ற கேள்வியை விட நாம் ஏன் செய்கிறோம் என்பது தான் மிக முக்கியம். மாணவர்கள் தற்போது படிப்பதற்கான நோக்கம் நீங்கள், உங்கள் குடும்பம், சமுதாயம் முன்னேற வேண்டும் என்பதற்காக. கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் பொதுநோக்கு சிந்தனையை கல்வி கற்றுதருகிறது.
ஆக்கமிக்க தொழிலை முதலில் தேர்வு செய்திட வேண்டும். பலஆயிரக்கணக்கான மக்கள் மனதினை சொல்லாடல்கள் வழி அறிந்திடும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள், சமூகம் ஆகியவற்றுடன் தினந்தோறும் நிறைய உரையாட வேண்டும். உரையாடல்கள் புதியனவற்றை கற்றுத்தருகின்றன.
எனவே, சிந்தனைத்திறன், ஆர்வம், படைப்புத்திறன், தொடர்புத்திறன், ஒத்துழைப்பு உள்ளிட்ட பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம், மாணவர்கள் ஒரு புதிய வரலாற்றை படைக்கலாம் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர்(தணிக்கை) அரவிந்த், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன், கல்லூரி முதல்வர் பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி
Check Also
நீலகிரி யானை வழித் தடங்களில் கட்டப்பட்டுள்ள 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!
நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை அதன் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உரிமையாளர்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் …