பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் வெள்ள நிவாரணம்: தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தகவல்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மழைவெள்ள நிவாரண உதவி வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணிதொடங்கியுள்ளது. விரைவில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்தஅதிகனமழை காரணமாக மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஏராளமான இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்தது. தற்போது வெள்ளம் வேகமாக வடிந்து வருகிறது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும், நிவாரணப் பணிகளையும் தலைமைசெயலர் சிவ்தாஸ் மீனா ந ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த அந்தோணியார்புரம் பாலம், தூத்துக்குடி புறவழிச்சாலையில் செங்குளம் ஓடையில் இருந்து உப்பாற்று ஓடைக்குச் செல்லும் மழைநீர் வடிகால், பாளையங்கோட்டை சாலை, எட்டயபுரம் சாலை, போல்பேட்டை – செல்வநாயகபுரம் சந்திப்பு பகுதியில் உள்ள கருத்தப்பாலம், பக்கிள் ஓடை, குறிஞ்சி நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி மாநகரம் தாழ்வான பகுதி என்பதால், வெள்ளநீர் பக்கிள் ஓடை வழியாகவே கடலில் கலக்க வேண்டும். பக்கிள் ஓடையில் முழுமையாக தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் சாலைதோண்டப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 40 மணி நேரத்தில் சராசரியாக 50 செ.மீ. மழை பெய்துள்ளது. இரு மாவட்டங்களின் மொத்த பரப்பு 8,500 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த பரப்பில் 50 செ.மீ. மழை பெய்துள்ளது. அதாவது, ஒவ்வொரு பகுதியிலும் அரை மீட்டர் மழை பெய்துள்ளது. இது மிக அதிக அளவாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.200 கோடியில் பல்வேறு வடிகால் பணிகள் நடந்து வருகின்றன. சில பகுதிகள் பக்கிள் ஓடையைவிட தாழ்வாக உள்ளன. அந்தப் பகுதிகளில் நிரந்தர மோட்டார் அமைக்கவேண்டியுள்ளது. இதை ஆராய்ந்து,தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நிவாரணம் வழங்குவதற்காக ஊரகப் பகுதிகளில் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. முதல்வர் அறிவிப்பின்படி, நகர்ப்புற பகுதிகளில் குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண உதவி வழங்கப்படும். அந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Check Also
சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்று சொல்லி சொன்னதையெல்லாம் செய்து காட்டியது கலைஞர் நாணயத்துக்கு அடையாளம்.நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவரது …