திண்டுக்கல்
15.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தினை
திண்டுக்கல்.
டிச13
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கள்ளிமந்தையம் ஊராட்சியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில்(சிஎஸ்ஆர்) இருந்து அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பதற்காக பாரத ஸ்டேட் வங்கி சார்பில்
பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில்(சிஎஸ்ஆர்) இருந்து வழங்கிய
ரூ.2.00 கோடி நிதியை பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் ஊராட்சியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில்(சிஎஸ்ஆர்) இருந்து ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு (12.12.2023) திறந்து வைத்து, சிக்கமநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற விழாவில், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பதற்காக பாரத ஸ்டேட் வங்கி சார்பில் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில்(சிஎஸ்ஆர்) இருந்து வழங்கிய ரூ.2.00 கோடி நிதியை பெற்றுக்கொண்டார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இந்த குடிநீர் திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும்.
பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் கள்ளிமந்தையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 5 ரூபாய் காசு செலுத்தினால் 20 லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சத்தியா நகர், நாகப்பன்பட்டி, விருப்பாச்சி, இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, புலியூர்நத்தம், தங்கச்சியம்மாபட்டி, ஐ.வாடிப்பட்டி, கோடாங்கிப்பட்டி, சிந்தலப்பட்டி, கேதையறும்பு, அத்திக்கோம்பை, லெக்கையன்கோட்டை ஆகிய அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
“மரத்தை வளர்த்தால், மரம் நம்மை வளர்க்கும்“ என்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பொன்மொழிக்கேற்ப மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மரங்களை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். வருங்கால சந்ததியினர் சுகாதாரமான காற்றை சுவாசிக்கவும், ஆரோக்கியமாக வாழவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இடையக்கோட்டை பகுதியில் 117 ஏக்கர் பரப்பளவில் 6.40 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இங்கு மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன. அதன் காரணமாக இடையக்கோட்டை பகுதியில் பருவமழை நன்றாக பெய்து வருகிறது. வேளாண்மைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 35.00 இலட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
மரக்கன்றுகளை பராமரிப்பதற்காக குளித்தலை கிராமியம் டிரஸ்டிற்கு ரூ.2.00 கோடி நிதியை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியுள்ளது. மரக்கன்றுகளை பராமரிப்பதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் ரூ.ஒரு கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடவு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1.60 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன. மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டமில்லா பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதேபோல் பெண்கள் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாவதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 31,000 பள்ளிகளில் பயிலும் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த ஆண்டு ரூ.37,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கள்ளிமந்தையம் ஊராட்சியில் மட்டும் இதுவரை ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கள்ளிமந்தையத்தில் அரசு கல்லுாரிக்கான கட்டடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவுபெற்று விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இடையக்கோட்டை ஊராட்சியில், உலக சாதனையாக 4 மணி நேரத்தில் 6 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட இடத்தை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். தொடர்ந்து, போடுவார்பட்டி ஊராட்சி, மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, சத்தரப்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மு.அய்யம்மாள், சத்தியபுவனா ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கா.பொன்ராஜ், பழனி வருவாய் கோட்டாட்சியர் சௌ.சரவணன், பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர்(வணிக வாடிக்கையாளர்கள் குழுமம்) ஆர்.ஆனந்தகணேசன், பாரத ஸ்டேட் வங்கி பொதுமேலாளர்(விரிவாக்கம்-2) திரு.கோவிந்த் நாராயண் கோயல், இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவன பொதுமேலாளர் ராஜேந்திரா, மேலாளர்கள் தயேந்திரா,.நஷிம் பாஜ், திரு.சரவணன்,.நிகிட், .சுமித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
————————————————-