கோடிகளில் சொத்துக்களை சம்பாதித்த பெற்றோர்கள் கடைசியில் கை செலவுக்கு கூட காசு இல்லாமல் அவதிப்படுவதாக சென்னை காவல் ஆணையரிடம்
புகார்!
சென்னை. அக் 06
2 கோடி சொத்தை பறித்து அப்பாவை தெருவில் விட்ட மகள்கள்.. சென்னை கமிஷனர் போட்ட அதிரடி உத்தரவு!
சென்னையில் வயதான முதியவரின் வீட்டை அவரது மகள்கள் பறித்துக் கொண்டு கவனிக்காமல் விட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்காமல் பிள்ளைகள் விட்டுவிடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. நம் பிள்ளை தானே என்று பலர் விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள். வயதான காலத்தில் பெற்றோரை சுமையாக கருதும் சில பிள்ளைகள், அவர்களின் சொத்துக்களை பறித்துவிட்டு அவர்களை துரத்திவிடுகிறார்கள்.
கோடிகளில் சொத்துக்களை சம்பாதித்த பெற்றோர்கள் கடைசியில் கை செலவுக்கு கூட காசு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இதேபோல் உடல் நிலை பாதிக்கப்பட்டால் கவனிக்கக்கூட ஆள் இல்லாமல் மனதளவில் நொறுங்கி போய் விடுகிறார்கள்.
ஒரு சில பெற்றோரே துணிந்து தன் பிள்ளைகள் மீது புகார் அளிக்கிறார்கள். சொத்துக்களை அபகரித்து தெருவில் விடும் பிள்ளைகளுக்கு பாடம் புகட்டுவார்கள். உயர்நீதிமன்றமும், பலமுறை இதுபோன்ற வழக்குகளில் பெற்றோருக்கு சாதகமாகவே தீர்ப்புகள் தந்துள்ளது. வயதான காலத்தில் பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளிடம், பெற்றோர் சொத்துக்கள் இருந்தால் அதனை பறித்து பெற்றோரிடமே தரும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளளது.
சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தினமும் (விடுமுறை நாள் தவிர) பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்துவது வழக்கம். புதன்கிழமையான நேற்று பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்று காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விசாரித்தார்.
அப்படி விசாரிக்கும் போது, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த 84 வயதாகும் ராஜகோபால் என்பவரிடம் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் புகார் மனுவை வாங்கினார். அந்த புகார் மனுவை படித்த போது அவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. 84 வயதாகும் முதியவரிடம் சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டு அவரது மகள்கள் விரட்டிவிட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக ராஜகோபால் அளித்த மனுவில், ” ஐயா என் பெயர் ராஜகோபால் (வயது 84), எனக்கு சென்னை வளசரவாக்கம், திருப்பூர் குமரன் தெருவில்வீட்டுடன் கூடிய நிலம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.2 கோடியாகும். எனது மகள்கள் ஐந்து பேரும் என்னை நன்றாகக் கவனித்துக் கொள்வதாக உறுதி அளித்து, அந்த இடத்தை தான செட்டில்மென்ட் பெற்றுக் கொண்டனர்.
ஆனால் அவர்கள் உறுதி அளித்தபடி என்னை கவனிக்க மறுக்கிறார்கள். எனவே, நான் எழுதிக்கொடுத்த தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்துசெய்ய வேண்டும்” என்று ராஜகோபால் கூறியிருந்தார். அத்துடன் மனுவில் உள்ள விஷயத்தை நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்தார்,
இதையடுத்து அந்த மனுவை பெற்றுக் கொண்ட சென்னைகாவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், முதியவர் ராஜகோபால் வீட்டுக்கே நேரில் சென்று விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்யும் பணியில் இறங்கி உள்ளனர். இந்த சம்பவம் உண்மை என்பது உறுதியானால் பத்திரத்தை ரத்து அந்த முதியவர் பெயருக்கே அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கோடிகளில் சொத்துக்களை சம்பாதித்த பெற்றோர்கள் கடைசியில் கை செலவுக்கு கூட காசு இல்லாமல் அவதிப்படுவதாக சென்னை காவல் ஆணையரிடம்
Check Also
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் ஆகும் டாக்டர் பிரசாந்த் பாராட்டி விருது வழங்கிய கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன்
சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொண்டு வெற்றி ஐபிஎஸ் ஆகும் டாக்டர் பிரசாந்த்க்கு கோவைகொங்குநாடு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பாராட்டி விருது …