கட்டிடங்களுக்கு அபராதம் செலுத்தினாலும் கிரிமினல் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது’. ஹைகோர்ட் உத்தரவு!
மதுரை: சட்டவிரோதமாகவும், கட்டிட வரைபட அனுமதி இல்லாமலும் கட்டப்படும் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த டைட்டஸ் மதன்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது: “மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட விளாங்குடி பகுதியில் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சட்டவிரோதமாக வீடுகள் கட்டப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் மாநகராட்சி தரப்பில் எடுக்கப்படவில்லை. எனவே, சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனு கடந்த டிசம்பர் 8-ந் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரையின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மதுரை மாநகராட்சியே துணை போயிருப்பதாக தெரிய வருகிறது. இதனால் பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. இதுதொடர்பாக உரிய காலத்துக்குள் மதுரை மாநகராட்சி பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. எனவே மதுரை மாநகராட்சி கமிஷனர், கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு செவ்வாய்கிழமையான நேற்று மீண்டும் நீதிபதிகள் சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் நேரில் ஆஜரானார். நான், பதவியேற்று ஒரு மாதம் மட்டுமே ஆகியிருப்பதால், விரைவில் மாநகராட்சி சார்ந்த வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக நீதிமன்றத்தில் உறுதி அளித்தார். அரசுத்தரப்பில் கூடுதல் தலைமை வக்கீல் வீராகதிரவன் ஆஜராகினார்.
வாதங்கள் முடிந்த பின்னர் நீதிபதிகள் கூறுகையில், “மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகவும், கட்டிட வரைபட அனுமதி இல்லாமலும் கட்டப்படும் கட்டுமானங்களை ஆய்வு செய்து இடிப்பதற்கான நடவடிக்கைகளை மதுரை மாநகராட்சி எடுக்க வேண்டும். அத்துடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி, கிரிமினல் புகார் தர வேண்டும். மாநகராட்சி தரும் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வசதியாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஒத்துழைப்புதர வேண்டும்.
தமிழக நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி சட்டத்தின்படி, விதிமீறல் கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், அபராதம் செலுத்துவதன் மூலம் கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியாது. இந்த உத்தரவு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள விதிமீறல் கட்டிடங்களுக்கும் பொருந்தும்” என்று உத்தரவிட்டுள்ளனர். இனி உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக விதிமீறி கட்டிடங்கள் கட்டுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும். கட்டிடங்கள் இடிப்பு மற்றும் சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
Check Also
நீலகிரி யானை வழித் தடங்களில் கட்டப்பட்டுள்ள 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!
நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை அதன் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உரிமையாளர்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் …