Breaking News

உத்தமபாளையம் வருவாய் வட்டத்தை இரண்டாகப் பிரித்து சின்னமனூர் ஒன்றியத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்கிட, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு கூட்டம் தேனி தெய்வ ஓட்டலில், தேனி தாலுகா செயலாளர் A.அரசகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.இரவி கலந்து கொண்டு, மாநில குழு முடிவுகள் தொடர்பாக விரிவாக கருத்துரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் கி.பெருமாள், மாவட்ட துணைச்செயலாளர் வே.பரமேஸ்வரன், மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.பி.ராஜ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பெ.தங்கம், இரா.தமிழ்பெருமாள், எம்.வி.கல்யாணசுந்தரம், வீ.பாண்டி, க.தனலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.திருமலைக்கொழுந்து, EP.காசிவிஸ்வநாதன், எஸ்.மதனகோபால், பா.பிச்சைமணி, இரா.கதிரப்பன் மு.காசிராஜா, M.முருகேசன், K.சத்தியராஜ், E.முத்துலட்சுமி, சி.பஞ்சவர்ணம், வீர்ராஜ், மணவாளன், A.வனராஜ், கர்ணன் ஆகியோர் கலந்து கொண்ட, இக்கூட்டத்தில் மக்கள் நலன் கருதி பல்வேறு வகையான தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
*தீர்மானங்கள்* :-
1) *கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்படுத்திட வேண்டும்.*
கம்பம் பள்ளத்தாக்கு தமிழ்நாட்டின், தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்குப் பகுதியாகும். மேற்கே ஏலமலையையும், கிழக்கே வருசநாட்டுக் குன்றுகளையும், தெற்கே சுருளி மலையையும், கொண்டுள்ளதாக இப்பள்ளத்தாக்கு விளங்குகிறது. வைகையாற்றின் துணையாறான முல்லையாறு, இப்பள்ளத்தாக்கை வளப்படுத்துகிறது. ஆண்டுதோறும் இருபோக நெற்சாகுபடியும், திராட்சை, தென்னை, வாழை ஆகியவையும் பரவலாகப் பயிரிடப்பட்டு வரும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். பல்வேறு விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் அன்றாடம் கூலி வேலை பார்த்து வாழ்க்கை நடத்தக்கூடிய கூலித் தொழிலாளர்களும் பெரிதும் வசித்து வருகிறார்கள்.
இப்பகுதியில் ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிப் படிப்பினை முடித்து கல்லூரிப் படிப்பை தொடர்வதற்கு ஏதுவாக அரசுக் கல்லூரிகள் ஏதும் இல்லாத நிலையில், தனியார் கல்லூரிகள் ஆதிக்கம் செலுத்தியும், அதீத கல்விக் கட்டணங்களும் வசூலிக்கப்படுவதால் பல மாணவர்கள் கல்லூரிப் படிப்பை தொடர முடியாமல் போகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இருபாலர் பயிலும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்படுத்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தேனி மாவட்டக்குழு, தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.
2) *19ஆம் கால்வாய்கள் திட்டத்தை உருவாக்க வேண்டும்* :-
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்ய மழையையே நம்பியுள்ளனர். எனவே கம்பம் பள்ளத்தாக்கு முல்லைப் பெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் அல்லது 19ஆம் கால்வாய் திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் பெருகி, நிலத்தடி நீர் ஆதாரம் பெருக்கிட வேண்டும். இதன்மூலம் மானாவாரி விவசாய நிலங்கள், புஞ்சை நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களை தகுந்த சாகுபடி செய்து விளைச்சல் நிலங்களாக மாற்றிடவும், விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பயன்படும் வகையிலும், மக்களின் குடிநீர் பிரச்சினையும் நிரந்தரமாக சரி செய்திடவும் மேலும் கண்மாய் குளம் குட்டைகளில் நீர் தேக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும், மத்திய அரசையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
3) *சின்னமனூர் ஒன்றியத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும்* :-
தேனி மாவட்ட நிர்வாக அலகுகளில் பெரியகுளம், உத்தமபாளையம் என இரண்டு வருவாய் கோட்டங்களையும், ஆண்டிபட்டி. உத்தமபாளையம், தேனி, பெரியகுளம், போடிநாயக்கனூர் ஆகிய 5 வட்டங்களையும், 113 வருவாய் கிராமங்களையும், 17 வருவாய் குறுவட்டங்களையும் கொண்டுள்ளது.
இவற்றில் சுமார் 5லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மிகப்பெரிய உத்தமபாளையம் வருவாய் வட்டத்தில் கம்பம், சின்னமனூர், கூடலூர் ஆகிய மூன்று நகராட்சிகளும் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களும், 11 பேரூராட்சிகளும், 39 வருவாய் கிராமங்களும் உள்ளன.
இங்கு அதிகமான மக்கள் வசித்து வருவதால் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த ஒரு பணிக்கும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், இந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அரசு சான்றிதழ்கள், சேவைகள் பெறுவதற்கும் பல்வேறு வகையான நலத்திட்டப் பணிகள் பெறுதற்கும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சின்னமனூர் நகர, ஒன்றியப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, உத்தமபாளையம் வருவாய் வட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரித்து சின்னமனூர் ஒன்றியத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்கிட, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு வலியுறுத்துகிறது.
4) *போடிநாயக்கனூர் முதல் மதுரைக்கு பயணிகள் இரயிலைப் தினமும் காலையில் இயக்க வேண்டும்* :-
12 ஆண்டுகளுக்கு பின் தொடங்கப்பட்ட இந்த பயணிகள் ரயில் போக்குவரத்தினால் போடி உள்ளிட்ட தேனி மாவட்ட மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன்படி தினமும் காலை 8.05 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு சுமார் காலை 10.30 மணிக்குள் போடிநாயக்கனூருக்கு வந்தடைகிறது. மீண்டும் மாலை 5.50 மணிக்கு போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இரயில் இரவு 7.50 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
தேனி மாவட்டத்திலிருந்து மதுரை மாநகருக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் டயாலிசிஸ், இதயவியல், நரம்பியல், மூளைக்கூறுயியல், சிறுநீரகவியல் உள்ளிட்ட மருத்துவ தேவைகளுக்காகவும், மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் பணிக்கு சென்று வந்திடவும், மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு சென்று வந்திடவும், வர்த்தகர்கள் வணிகத்திற்கு சென்று வந்திடவும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு புறப்படும் பயணிகள் இரயிலைப் போலவே தினமும் காலை 7.00 மணிக்கு மேல் போடிநாயக்கனூரில் இருந்து மதுரைக்கு ரயில் புறப்படுவதற்கு மக்களின் நலன் கருதி தென்னக இரயில்வே நிர்வாகமும், மதுரை இரயில்வே கோட்ட நிர்வாக இயக்குனரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு வலியுறுத்துகிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக தேனி மாவட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

About neWsoFtTAmilNADu

Check Also

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

*மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு …