Breaking News

இரண்டு ஆண்டில் ரூ.4,730 கோடிக்கு மணல் கொள்ளை: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல்!

இரண்டு ஆண்டில் ரூ.4,730 கோடிக்கு மணல் கொள்ளை: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல்!

சென்னை: நவ .29

சட்டவிரோதமாக மணல் அள்ளியதன் வாயிலாக, 4,730 கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளை அடிக்கப்பட்டது,
விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் அளித்துஉள்ளது.
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் ஐந்து மாவட்ட கலெக்டர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, அமலாக்கத் துறை உதவி இயக்குனர் மஞ்சுநாதன் சார்பில், சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் தாக்கல் செய்த மனு:
சட்டவிரோத பண பரிமாற்ற குற்றத்துக்கான விசாரணையை முறியடிக்க, மாநில அரசு முயற்சிக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன; விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்.
சம்மனுக்கு தடை விதித்தால், புலன் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும். சட்டவிரோதமாக மணல் அள்ளியதன் வாயிலாக, 4,500 கோடி ரூபாய்க்கு மேல் ஆதாயம் கிடைத்திருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது, 28 இடங்களில் மணல் அள்ள, நீர்வளத் துறை அனுமதி வழங்கி உள்ளது.
கான்பூர் ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் அடங்கிய நிபுணர்கள் குழு, 28 இடங்களிலும் அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தி, எந்த அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது;
என்பதை கண்டறிந்துள்ளது.

இந்த, 28 இடங்களிலும், 490 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது; ஆனால், 2,450 ஏக்கருக்கு மேல் மணல் அள்ளப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை பதிவேட்டில், 4.05 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 27.70 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டுள்ளது. அதாவது, 24 லட்சம் யூனிட் அதிகமாக அள்ளப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்டவிரோதமாக அள்ளப்பட்ட கூடுதல் மணல் விற்பனையின் மதிப்பு, 4.730 கோடி ரூபாய் என, கணக்கிடப்பட்டுள்ளது.
ஆவணங்களில், 36.45 கோடி ரூபாய் வருவாய் என்று காட்டப்பட்டுள்ளது. இது, ஒரு சதவீதத்துக்கும் குறைவு.
இந்த குற்றத்தின் வாயிலாக கிடைத்த மொத்த ஆதாயம், 4,730 கோடி ரூபாய். இந்த அளவுக்கு பொது மக்கள் மற்றும் அரசின் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மணல் அள்ளவும் விற்கவும், நீர்வளத் துறைக்கு மட்டுமே அனுமதி உள்ளது.
சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் வாயிலாக, மணல் மாபியா, அரசு ஊழியர்கள், பயனாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

அமலாக்கத் துறை விசாரணையின் போது, நீர்வளத் துறை அதிகாரிகள், பொறியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் பாதுகாப்பு கருதி, பெயர்களை வெளியிடவில்லை.
உயர் அதிகாரிகள், பொறியாளர்களின் வாக்குமூலங்களில் இருந்து, சட்டவிரோதமாக கூடுதல் மணல் அள்ளப்பட்டிருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
மணல் குவாரியை கண்காணிப்பது, சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுப்பது, அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக மணல் அள்ளியதன் வாயிலாக, பண பரிமாற்றம் நடந்திருப்பது குறித்து விசாரிக்க வேண்டிய கடமை, அமலாக்கத் துறைக்கு உள்ளது. எனவே, இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

About neWsoFtTAmilNADu

Check Also

நீலகிரி யானை வழித் தடங்களில் கட்டப்பட்டுள்ள 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை அதன் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உரிமையாளர்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் …